பிரகன்நாயகி உடனுறை வில்வனேஸ்வர் ஆலயம் - நல்லூர்
நான் ஆலயங்களை பற்றி எழுத ஆரம்பிக்கும்போது நான் முதலில் எழுதவேண்டிய ஆலயம் இது . ஏனென்றால் நான் பிறந்து வளர்த்த ஊரின் ஆலயம் இது .எனக்குள் கடவுளின் மேல் நம்பிக்கையும் ஆர்வமும் கிட்டிய தலம் .நான் முதன் முதலில் வணங்கிய எம்பெருமான் என் அம்பலத்தானின் திருமுகம் கண்ட தலம் .
விருத்தாசலம் -வேப்பூர் சாலையில் சென்று கண்டப்பங்குறிச்சி சென்று வடக்கில் நான்கு கிமி செல்லவேண்டும்.கடலூர் மாவட்டத்தில் அமைந்த நல்லூர் என்ற ஊர் ஆகும் . இவ்வூருக்கு
தனி சிறப்பு தருவது மூன்று நதிகள் கூடுமிடமாக அமைந்துள்ளது என்பதே,இந்தத் திருத்தலத்தையொட்டி ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு , கோமுகி நதியும் கிழக்கு நோக்கி பாய்கின்றன . ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தலம் நல்லூர்.
நல்லூர் வில்வவனேஸ்வரர் ஆலயம் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் மேட்டுப் பகுதியான இடத்தில வட மேற்கே அழகுற அமைந்துள்ளது
திருக்கோவிலில் கருவறை,அர்த்தமண்டபம் , மகாமண்டபம் ,முகமண்டபம்
மகா மண்டபம்:
இம்மண்டபம் சோழர்கால தூண்களை கொண்டுள்ளது ,தூண்களில் வடக்குபுறம் ஒரு தூணில் கல் வெட்டு காணப்படுகிறது.
"ஸ ஸ் ஸ்ரீ தனித்த
யாண்ட பஞ்சசதி
தகன அறுபடை
யான சுந்தரபட்ட
நான தில்லைநாயக
வேளான் "
என்று வெட்டப்பட்டுள்ளது , சுந்தர பட்டனான தில்லை நாயக வேளான் கட்டி வைத்த மண்டபக இருக்ககூடும் , தூண்களும் மண்டப அமைப்பும், கட்டடக் கலைத்திறனும் ஒப்பு நோக்கும் போது இவை சோழர் காலத்திய கலை முறை என்பதை உணர முடிகிறது. மேலும் இம்மண்டபம் மூன்று பக்கங்களிலும் திறந்த நிலையிலும் ,விதானத்தில் மீனின் பெரிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது .
கல்வெட்டுக்களை ஒப்புநோக்கும் போது இங்கு சோழர்களும், பாண்டியர்களும்,விசயநகர மன்னர்களும் இப்பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் அரசாண்டாமை புலனாகின்றது.இவற்றில் இக்கோயில் மூலத்தானம் முதல் மகா மண்டபம் வரையில் சோழர்கால கலைப்பணியாக திகழ்கின்றது. கோபுரம் ,முக மண்டபம் பிற பிற்க்காலத்திய பணிகளாக தோன்றுகிறது.ற அமைப்புடன் அமையபெற்றுள்ளது.
நுழைவு வாயிலில் கோபுரமும், முன்மண்டபங்களும்,
திருமண மண்டபம் காணப்படுகிறது .நந்தி மண்டபம் இறைவனை நோக்கி எழுப்பட்டுள்ளது .
இறைவன் கிழக்கு நோக்கியும் அவரது இடது புறத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார்.
வடக்கு திசை நோக்கிய முருகன் :
இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு.
முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம்.
கருவறை சுற்றி சுற்றாலை மண்டபங்கள் உள்ளன அதில் அறுபத்து மூவர் உள்ளனர். பின் புறம் பிராண தியாகர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி உள்ளனர்.
கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவபெருமாள், பிரமன், துர்க்கை உள்ளனர் அது போல் இறைவியின் கருவறை சுற்றி ஞானசக்தி, கிர்ரியாசக்தி, பிரம்மா சக்தி என சிலைகள் உள்ளன. இறைவியின் முகப்பு மண்டபம் ஒட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியுள்ளார்.
இறைவியின் எதிரிலும் இறைவனின் எதிரிலும் தனி தனி கொடிமரங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சூரியன் உள்ளன.
இக்கோயில் கடக ராசி உள்ளவர்கள் பார்த்து அருள் பெறவேண்டிய தளம் .ஒரு காலத்தில் வில்வமரங்கள் உள்ள காடுகளுக்கு நடுவே எம்பெருமான் உள்ளதால் இவருக்கு வில்வனேஸ்வர் என்ற பெயர் கிட்டியது .இன்றும் ஊருக்கு வெளியே சுற்றிலும் ஆறுகளால் சூழப்பட்டு நிறைய மரங்களுக்கு இடையே ரம்யமாக அமைதியாக காட்சி அளிப்பார் .
இந்த கோவிலில் மாசி மகம் ஆறாம் நாள் திருவிழா ரொம்ப விசேஷமானது .திருவட்டத்துறையில் 5 ஆம் நாள் திருவிழாவும் ,ஆறாம் நாள் திருவிழாவின் காலை விருதாச்சலத்திலும் இரவு இங்கேயும் வரிசையாக காண்பவர்கள் காசிக்கு போய் கிட்டும் புன்னியம் கிட்டுவதாக ஐதீகம் .அதுபோல் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாழ்ந்தது .இங்கு பஞ்ச பாண்டவர்கள் தங்கி ஈசனை வணங்கியதாக சொல்லப்படுகிறது .
அம்பாள் பாலாம்பிகை வேண்டினாள் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு . உங்களுக்கு கடலூர் மாவட்டம் செல்லும் நேரம் கிடைத்தால் இந்த கோவில் , மிக அருகில் உள்ள விருதை,கொளஞ்சியப்பர் ,ஸ்ரீமுஷ்ணம் வராகர் இவைகளையும் சேர்த்து பார்க்கலாம் .
இறைவன்- வில்வனேஸ்வரர்
இறைவி- பிரகன்னாயகி
No comments:
Post a Comment