13.2.18

Arulmighu Thiruvalythayam Tiruvalleswarar Temple- Padi

வலிதாய நாதர் திருக்கோவில், திருவலிதாயம், பாடி (சென்னை)

_________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் இருபதாவது தலமாகப் போற்றப் படுகிறது.




இறைவன்:

 வலிதாய நாதர், வல்லீஸ்வரர்.
இறைவி: ஜகதாம்பாள், தாயம்மை.

தல விருட்சம்: பாதிரி மரம், கொன்றை.

தல தீர்த்தம்: பரத்வாஜ் தீர்த்தம்.
ஆகமம்: காமீகம்.
ஆலயப் பழமை:  2000 ஆண்டுகள் முற்பட்டது 

தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.



பெயர்க்காரணம்:

பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.



அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு இருந்தது.

ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் இருந்தது.

அம்பாள் உருவம் ஒரு காலத்தில் பின்னப்பட, புதிய மூர்த்தம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து, பின்னமான மூர்த்தத்தை ஈசன் கருவறைக்கு உள்ளே வைத்து விட்டதாக சொன்னார்.


பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் இருந்தது. கைதொழுது வணங்கிக் கொண்டோம்.



பாரத்வாஜ தீர்த்தம்:
ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி உருவம் பெற நேர்ந்தது.

சாபம் நீங்கப் பெற்றார் அவர் (கருங்குருவி) திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார்.

நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறானது அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது என்பர்.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது.

விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும்வேளையில் தான் திருமணம் நிச்சயமாகும்.

ஆனால், நல்ல வரன் அமைய வியாழக் கிழமைகளில் இங்குள்ள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

தல சிறப்பு:

இக்கோவிலில் குரு பகவான் தவம் புரிந்து காமத்தீயை வென்றவராவார்.

அதனால் சென்னையில் உள்ள ஓர் குரு தலமாகவும் திகழ்கிறது.

திருமால், அனுமன், சுக்ரீவன், ராமபிரான், லவகுசலர் முதலியோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்ற தலம் இது.

அகத்திய முனிவர் வில்வலன், வாதாபி ஆகியோரை கொன்ற பாவம் நீங்க இத்தலத்தப் பெருமானை வழிபட்டு பேறு பெற்ற தலமும் இது.

தல பெருமை:

திருவலிதாயம் என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது பாடி என வழங்கப்படுகிறது.

வியாழ பகவானின் மகன்களாக பரத்வாஜர், கரிக்குருவி என்கிற வலியன் ஆகியோர் பிள்ளைகளாக பிறந்தார்கள்.

பரத்வாஜர் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தம் அடைந்து, பல புண்ணிய தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார்.

அவர் இங்கு வந்த போது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார்.

லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார்.

இதனால் இத்தலத்தில் புறாக்கள் அதிகம் காணப்பெறலாம்.

எனவே தான், இத்தலம் “திருவலிதாயம்”என்றும் சிவன் “வலியநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மன் தவப்புதல்வியரான கமலை, வள்ளி என்னும் இருவரையும் விநாயகப்பெருமான் இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.




இத்திருத்தலத்தில் சாப விமோசனம் பெற்றவர்களின் பட்டியல் அகத்தியர் , சந்திரன் , யமன் , அக்னி , ராமர் , அனுமான் ,லவகுசர்கள் , மன்மதன் , இந்திரன் திருமால் என நீளுகிறது.

இது வியாழ பகவான் சாப விமோசனம் பெற்ற தலமாதலால் இது குருஸ்தலமாகவும் விளங்குகிறது.

இங்கு குருவுக்கென்று தனி சன்னதி ஒன்றும் சமீபத்தில் கட்டப் பட்டுள்ளது.

மேலும் இத்திருத்தலத்தில் எழுந்தளியுள்ள எம்பெருமானுக்கு திருவல்லீஸ்வரர் எனப் பெயர் வந்த காரணத்தையும் விளக்கினார் குருக்கள்.

ஒரு முறை பிரம்மாவின் புதல்விகளான கமலை , வல்லி என்பவர்கள் சிவனையே மணாளனாக அடைய நினைத்து தவமியற்றினர்.

அதைத் தெரிந்து கொண்ட சிவ பிரான் தான் சக்திக்கு ஒரு பாதி உடலை அளித்து விட்டதால் அவர்களை மணக்க இயலாத நிலையில் உள்ளதாக எடுத்துக் கூறினார்.

இதில் உள்ள உண்மையை உணர்ந்த அவர்கள் சிவபெருமனைவிடப் புகழில் சற்றும் குறையாத அவரது மகனான விநாகரைத் திருமணம் செய்து கொண்ட இடமாதலால் இங்குள்ள ஈஸ்வரர் , திருவல்லீஸ்வரர் என அழைக்கப் படுகிறார் என்றும் தெரிவித்தார்.

திருஞான சம்பந்தர் மட்டுமல்ல , அருணகிரியார் தான் பாடிய திருப்புகழிலும் திருவலிதாயத்தில் குடி கொண்டுள்ள எம்பிரான் முருகனை, மருமல்லியார்... எனத் தொடங்கும் பாடலின் மூலம் வணங்கியுள்ளார்.

மேலும், கருணையின் மறு வடிவமாகத் திகழ்ந்த இராமலிங்க அடிகளார் , திருவருட்பாவில் இங்குள்ள ஈசனை.......

சிந்தை நின்ற சிவாநந்தச் செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாயத் தலைவ நீ
கந்தை சுற்றும் கணக்கது என் கொலோ!
எனக் கசிந்துருகுகிறார்.

மேலும் இவர் வலிதாய நாதன் மீது பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

மிகவும் பழம் பெருமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் முதலில் வெறும் மரத்தடிக் கோயிலாகவும் , பின்னர் மரக் கோயிலாகவும் இருந்திருக்கிறது.

சோழர் காலத்தில் தான் கற்கோயில் கட்டப்பட்டது என்பதை இங்கேயுள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இங்கே முந்தைய காலங்களில் ஆயர் குலத்தவர் அதிகம் வசித்து வந்த்தால் பாடி என்னும் பெயர் பெற்றது என்கின்றனர்.


*பாடலின் மேன்மை:*
திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற புகழை உடையது இந்தத் திருத்தலம்.

பத்தரோடு ... எனத் தொடங்கி பத்து பாடல்கள் இயற்றியுள்ளார்.

இவ்வாறு பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பிற்கு தமிழ் இலக்கணம் இட்டிருக்கும் பெயர் தான் பதிகம்.

அவர் இறைவனை வலிதாய நாதர் எனவும் இறைவியை தாயம்மை எனவும்  பாடியிருக்கிறார்.

ஆனால் அர்ச்சனையில் இறைவனை திருவல்லீஸ்வர ஸ்வாமி என்றும் அம்பிகையை ஸ்ரீ ஜகதாம்பிகா என்றும் குறிப்பிடுகிறார்கள்.

*சம்பந்தர் தேவாரம்*
பண் :நட்டபாடை

1.பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.



2.படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கலனேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில்
மடையிலங்குபொழி லின்னிழல்வாய்மது வீசும்வலிதாயம்
அடையநின்றவடி யார்க்கடையாவினை யல்லற்றுயர்தானே.


3.ஐயன்நொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்றிரு மாதோடுறைகோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீரும்நலமாமே.



4.ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படைசூழப்
புற்றினாகமரை யார்த்துழல்கின்றவெம் பெம்மான்மடவாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட வுள்கும்வலிதாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடியார்க்கே.


5.புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.



6.ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவரேத்தக்
கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன்சடைதன்மேல்
வானியன்றபிறை வைத்தவெம்மாதி மகிழும்வலிதாயந்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளிவாமே.



7.கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர்வீட்டிப்
பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய பெம்மானுறைகோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலிதாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் முண்மைக்கதியாமே.


8.கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.



9.பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயின்மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடிவாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழுதேத்த
உரியராகவுடை யார்பெரியாரென வுள்கும்முலகோரே.


10.ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர்கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொருளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலிதாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரியோரே.



11.வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருண் மாலைத்தமிழாகக்
கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர்வாரே.


திருவிழாக்கள்:

சித்திரையில் பிரமோற்சவம்,
தை கிருத்திகை,
குரு பெயர்ச்சி.


ஆலயப் பூஜை காலம்:

தினமும் காலை 7.00 மணி முதல் 12.00  மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

 இருப்பிடம் 

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது.

சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம்.
*தொடர்புக்கு:*
044- 26540706

நன்றி -  கு . கருப்புசாமி 

No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...