மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்
______________________________ ____________
மூலவர் -ம ருந்தீஸ்வரர், பால்வண்ண நாதர்.
அம்பாள் - திரிபுரசுந்தரி, சொக்க நாயகி.
தல விருட்சம்- வன்னிமரம்.
தல தீர்த்தம்- பாபநாசினி, அமுதவால்மீகி.
தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 214
தல வரலாறு
கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது.
இதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார்.
தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார்.
அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார்.
அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார்.
இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார்.
அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார்.
சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.
வன்னி மரம்
வன்னி மரம் |
ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும்.
இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
வான்மீகி முனிவர் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில்தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன.
அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார்.
இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாளில் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
ஆலய சிறப்பு:
ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது.
அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார்.
தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூ ரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார்.
அதன்படியே இத்தலம் வந்து வழிபாடு செய்து, ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு.
பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் *பால்வண்ண நாதர்* என்று பெயர் பெற்றார்.
அதுபோலவே, இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்களைப் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகளைப் பற்றியும் ஈசன் இவருக்கு உபதேசித்தருளினார்.
அதன் காரணமாகவே ஈசனை, *மருந்தீஸ்வரர், ஔஷதநாதர்* (ஔஷதம் என்றால் மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்கள்.
காலம் அறிய முடியாத அந்தக்காலத்தில், அகத்தியருக்கு வந்த வயிற்றுவலியை நீக்க சித்த மருத்துவ முறைகளை, சித்துக்களின் நாயகராம் சிவனாரே வந்து போதித்த இடம்தான் திருவான்மியூர். தலம்.
இங்கு இருப்பவரே மருந்தீஸ்வரர், மருத்துவர், நோயொழிப்பவர், நோய்வராதும் காப்பவர். இவரைப் பார்க்கச் செல்ல பணமேது என்பார்கள் சிலர்.
திருவான்மியூர் மருத்துவரை (மருந்தீஸ்வரர் வைத்தியர்.) ஒரு முறை தரிசிக்கச் செல்லுங்கள்.
அகிலத்தின் நாயகனாம் மருந்தீஸ்வரர் என்ற இறைவன், ஓர் ஆவின் பாலை உண்டு செழித்து கிளர்தெழுந்து நின்ற இடம்தான் இந்த திருவான்மியூர்.
வசிஷ்ட மாமுனியின் யாகத்தில் பால் சொரிய தாமதித்த காமதேனு, சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் செல்ல சபிக்கப்பட்டது.
சாபம் நீங்கப் பூவுலகின் புண்ணிய க்ஷேத்திரமான திருவான்மியூர் வந்தடைந்தது அந்தத் தெய்வப் பசு.
ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டுகொண்டது.
பாவம் நீங்க, பாலைச் சொரிந்து வழிபட்டது. ஈசனின் மீது கொண்ட பக்தியின் அவசர மேலீட்டால், லிங்கத் திருமேனி மீது தவறி கால்பட, அதை இன்றும் திருத்தழும்பாக ஏற்றுக்கொண்டு பால்வண்ண நாதராக, அன்னை திரிபுரசுந்தரியோடு காட்சிதரும் திருத்தலமே திருவான்மியூர்.
வான்மீகம் என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது *வான்மிகியூர்* என வரலாறு உரைக்கிறது.
ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.
வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் என்கிறது.
அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
தொண்டை மண்டலத்தின் வெகு சிறப்பான பதினெட்டு கிராமங்களில் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது.
இங்குதான் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
பாவநாசினி, ஜன்மநாசினி என இரு திருக்குளங்களைக் கொண்டு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது.
கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை... என பரிவார தெய்வங்களோடு ஆலயம் சிறப்புற பிரமாண்டமாக இருக்கிறது.
சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றது எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது.
அருள் வழங்கும் அன்னை உமையவள் இங்கு *சொக்கநாயகி* எனும் திரிபுரசுந்தரியாக நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள்
மனமுருகி தன்னைத் தொழுவோரிடம் பேசும் சக்திகொண்டவள் இந்த அன்னை.
பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தந்துவருபவள் அன்னை திரிபுரசுந்தரி.
அன்னையின் ஆலயத்தின் வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர்.
அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியதும், சித்த வைத்திய முறைகளைக் கேட்டு அறிந்ததும் இந்த ஆலயத்தின் வன்னி மரத்தின் அடியில்தான்.
இதனால், இந்த வன்னி மரத்தடியில் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாத பிரம்மோற்ஸவத்தில் ஒன்பதாம் நாள் ஈசன் அகத்தியருக்குக் காட்சிதருகிறார்.
முக்கியத் திருவிழாவான நடராஜரின் நடனக்காட்சியையும் ஆண்டுதோறும் வால்மீகி முனிவருக்கு காட்சி விழா நடக்கும்.
குற்றாலத்துக்குப் பிறகு திருவான்மியூரில் நடக்கும் இந்த நடனத் திருவிழாவே இங்கு மிக சிறப்பானது.
சோழர்கால கல்வெட்டுகள் பதினாறைக் கொண்டுள்ள இந்தப் பழைமையான திருத்தலத்தைத் திருநாவுக்கரசர் பெருமான், திருஞானசம்பந்த பெருமான் என இருவராலும் பாடப்பெற்றது.
இங்கிருக்கும் மருந்தீஸ்வர பெருமான் ஆரம்பத்தில் கிழக்கு நோக்கிப் பார்த்தபடி இருந்தார் என்று சொல்லப்படுகிறது.
ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தரிசிக்க வந்த அப்பையதீக்ஷிதர் என்னும் பக்தரின் வேண்டுகோளுக்காக மனமிரங்கிய ஈசன், மேற்குப்புறமாகத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது.
இன்று திருவான்மியூர் மார்க்கெட்டாக இருக்கும் பகுதி, அப்போது மங்கள ஏரியாக பெரும் வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது, இங்கு வந்த அப்பையதீக்ஷிதர் தரிசிக்க இயலாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன்.
வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர்,
சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு தியாகராஜ பெருமான் என்ற பெயரில் உற்சவராகவும் கொண்டாடப்படுகிறார்.
நக்கீரர் உள்ளிட்ட பல புலவர்களாலும் கொண்டாடப்பட்டவர் இந்தப் பெருமான்.
அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் இங்கு கண்டு வழிபடத்தக்க முக்கியமான பூஜைகள்.
இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக் கொண்டு நோய்
ஒழியப்படுகிறது.
சொல்லச் சொல்ல நீளும் இந்த திருத்தலத்து ஈசனையும் இறைவியையும், காணும்போதே உள்ளிருக்கும் நோய் குணமாகிவிடும் வைத்திய இறைவர்கள்.
இதை எழுத்தால் மட்டும் உணர முடியாது. ஒருமுறை சென்று தரிசித்துப் பாருங்கள்.
அதன் பிறகு மருந்தீஸ்வரரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறிவிடும் அதிசயத்தை உணரப்பெறுவீர்கள்.
வந்த நோய்க்கு மட்டுமல்ல, நோயே வராமல் காப்பதிலும் இவரே அதிசய வைத்தியர்.
தேவாரம் பாடியவர்கள்:
திருநாவுக்கரசர் -ஐந்தாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறையில் ஒரு பதிகமும், மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகமும். ஆக மொத்தம் இத்தலத்திற்கு மொத்தம் மூன்று பதிகங்கள்.
இருப்பிடம்:
இந்தத் தலம் சென்னையின் தென் பகுதியில் திருவான்மியூரில் இருக்கிறது.
சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து வசதிகள் நிறைய இருக்கின்றன.
திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.
அஞ்சல் முகவரி:
நிர்வாக அதிகாரி.
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர்,
சென்னை.
PIN - 600 041
இவ்வாலயம் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
சம்பந்தர் தேவாரம்:
1. கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.
2. சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல்கொண்டுதம்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழன் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.
3. கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.
.4. மஞ்சு லாவிய மாடம திற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சிரு ளாட லுகக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.
5. மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.
6. போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறம்
தீதி லந்தண ரோத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.
7. வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.
8. தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.
9. பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்ச்
சுருதி யாரிரு வர்க்கு மறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன்றுகந் தில்பலி யேற்றதே.
10. மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.
11. மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
நீதி யானினை வார்நெடு வானுல காள்வரே.
.
திருவிழாக்கள்:
பங்குனி மாதத்தில் நடைபெறும் பத்து நாட்கள் பிரமோற்சவம் பெருவிழா.
ஏழாம் நாள் தேர்த்திருவிழா.
ஒன்பதாவது நாள் வன்னிமர சேவை.
பத்தாம் நாள் வான்மீகி முனிவருக்காக இறைவன் ஆடிய திருநடனம்.
பதினோராம் நாள் தெப்ப உற்சவம்.
தொடர்புக்கு:
044- 24410477
நன்றி - கோவை - குப்புசாமி அவர்கள்
திருச்சிற்றம்பலம்